இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புதுவை அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . புதுவை அரசின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரிலான இந்த விருதினை முதலமைச்சர் நாராயணசாமி இயக்குனர் பார்த்திபனுக்கு வழங்கினார்.
மேலும் விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது . இதையடுத்து ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் திரையிடப்பட்டது. இந்த அரங்கில் வருகிற 19-ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழி திரைப்படங்கள் இலவசமாக பார்க்கலாம். அதன்படி 16ஆம் தேதி ‘ஜேஷ்தோபுத்ரா’ வங்கமொழி திரைப்படமும், 17ம் தேதி ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படமும், 18ஆம் தேதி ‘எப் 2 பன்அண்டு பிரஸ்ட்ரேஷன்’ தெலுங்கு படமும், 19ஆம் தேதி ‘உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ ஹிந்தி படமும் திரையிடப்படவுள்ளது .