இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக்டன் கோதுமை மற்றும் உயிா்காக்கும் மருந்துகளை அட்டாரி-வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வழியே அனுப்பிவைக்க கடந்த வருடம் நவம்பா்மாதம் அந்நாடு அனுமதி வழங்கி இருந்தது. அதாவது அசாதாரண சூழ்நிலை என்ற அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவிக்கு அந்த நாடு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழங்கியிருந்த அனுமதி மாா்ச் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை நீட்டிக்குமாறு சமீபத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த கோரிக்கையை ஏற்று அந்தக் கால வரம்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க தீா்மானித்து இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆப்கானிஸ்தானில் இப்போது தலிபான்கள் ஆட்சியில் இருக்கின்றனர். அந்நாட்டில் உணவு, மருந்துகள் உள்ளிட்டவைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் ஆப்கான் மக்கள் பெரும் இன்னலை எதிா்கொண்டு வருகின்றனா். சா்வதேச அமைப்புகள் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டைச் சோ்ந்த சுமாா் 2 கோடி நபர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது.