அண்மையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்குபாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு வந்த போது, இடிந்து விழுந்தது. நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மச்சுஆற்றின் நீரோட்டத்தின் அழகை பார்க்க இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது வழக்கம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை எனவும் துருப்பிடித்த பழைய கேபிள் வயர்கள், அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 100 வருடங்கள் பழமையான பாலங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ரயில்வே துறையை எடுத்துகொண்டால், 100 வருடங்கள் பழமையான பாலங்கள் நிறைய இருக்கிறது. அவற்றின் நம்பகதன்மையை ஆய்வு மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு கண்ட 38,850 ரயில்வே பாலங்கள் நாட்டில் இருக்கிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்பு தெரிவித்திருந்தது. இப்பாலங்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக பராமரிக்கும் பணியினை ரயில்வே நிர்வாகமானது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த பாலங்களை வருடத்திற்கு இருமுறை ரயில்வே நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.