சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்திலுள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்க போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதாவது 5 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்த நிகழ்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஷர்மா, கல்லூரி முதல்வர் மற்றும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “வரலாற்று சிறப்பு வாய்ந்த 44வது செஸ் ஒலிம்பிக்போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் துவங்க இருக்கிறது. அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்பு சென்னையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைத்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் போட்டி போட்ட சூழ்நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியால் 24 மணிநேரத்தில் செஸ் ஒலிம்பிக் போட்டி தமிழகத்தில் நடைபெற அனுமதி பெற்றார். இந்திய வரலாற்றில் இது வரைக்கும் 187 நாடுகள் கலந்துகொண்ட விளையாட்டு போட்டிகள் நடந்ததாக வரலாறு கிடையாது. தற்போது அப்படிப்பட்ட ஒரு சரித்திர நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடத்துவதற்கு பெற்றுத் தந்து அந்த செஸ் போட்டியை தலைமையேற்று நேரடியாக கண்காணித்து, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சென்ற 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஒலிம்பிக்தீபத்தை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கடந்து வருகிற ஜூலை 28ஆம் தேதி தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்க இருக்கிறது. இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கின்றனர். இதில் ஏராளமானோர் தமிழகத்தில் இருப்பவர்கள். அதிலும் குறிப்பாக சென்னையில் தான் இருக்கிறார்கள். இந்தியாவில் செஸ்விளையாட்டின் தலைமையமாக சென்னை இருக்கிறது. இப்போட்டி இங்கு நடைபெறுவது நமக்கு மகிச்சியை ஏற்படுத்துகிறது. அதற்குரிய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இவற்றில் 187 நாடுகளைச் சேர்ந்த 227 அணிகள் கலந்துகொள்ள இருக்கிறது. இதனிடையில் 135 நாடுகளுக்கும் மேலாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய விசாக்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிற நாடுகளிலிருந்து வருகைதர உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு விசா வழங்க வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம்.
அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் சென்ற 24 மற்றும் 25ஆம் தேதி குஜராத்திலுள்ள நிவடியா என்ற பகுதியில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தைச் சார்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு நடந்தது. அப்போது விளையாட்டு போட்டிகள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கருத்து மின் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நோக்கமும் அதுவாகத் தான் உள்ளது. விளையாட்டு போட்டிகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கொண்டு சென்றால்தான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
அமெரிக்க நாட்டில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைகழகம் ஒலிம்பிக் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்றுள்ளது என்பது வரலாறு. அதனடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் கொண்டு செல்வதுதான் தமிழ்நாடு முதல்வரின் அடுத்த இலக்கு ஆகும். கொரோனா தொற்றுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சென்ற காலத்தில் ஓவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டு (PET) வகுப்புகள் இருந்த நிலையில், தற்போது அது இல்லை. இதனால் மீண்டுமாக அதனைக் கொண்டு வந்து நடைமுறைபடுத்துவதற்க்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு இருக்கிறார்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.