திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக சிபிஎம் அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக சிபிஎம் சார்பில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீஷியன் ஆவார். அவரது தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி முகவரான உள்ளார். தற்போது ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதவியல் இரண்டாம் ஆண்டு பயின்றுவரும் ஆர்யா, எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர் ஆவார். மேலும், சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.