டாப் பணக்காரர்களில் பட்டியல் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 50 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தகவல் கூறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மொத்தம் 775 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
எப்போதும்போல இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 14வது ஆண்டாக இவர் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்து வருகிறார். அதனை அடுத்து இரண்டாவது இடத்தை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலர் ஆகும். மூன்றாவது இடத்தில் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், நான்காமிடத்தில் ராதாகிஷன் தமானி, ஐந்தாமிடத்தில் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா இடம்பிடித்துள்ளனர்.