பிரபல மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள கே.கே. நகரில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், மருத்துவக் கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், கல்லூரி பொது இயக்குனர் ராஜேந்திர குமார், மருத்துவ ஆணையர் அன்ஷீ சாப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் பூவேந்தர் யாதவ் பணியாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகம், உணவகம், ஓய்வு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் 179 மாணவர்களுக்கு பட்டங்களையும் கேடயங்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
மேலும் இது குறித்த அவர் கூறியதாவது. நமது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி நீங்கள்தான். மேலும் நீங்கள் உங்கள் பணியை மக்களின் நல்வாழ்வுக்காக செய்ய வேண்டும். இந்த கல்லூரி கடந்த ஜனவரி முதல் தினம்தோறும் சராசரியாக 5 லட்சத்து 76 ஆயிரத்து 329 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளது. இந்நிலையில் இஎஸ்ஐசி நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், திறமையான இளம் மருத்துவர்களை ஆண்டுதோறும் உருவாக்குகிறது. இதன் மூலம் 6,400 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் இனிவரும் காலங்களில் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகளும், 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் நமது நாட்டில் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.