Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு பலன் தரும் வகையில் அமெரிக்க விசா…சலுகைகளை அறிவித்த அமெரிக்கா…!!!

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தங்கி, அந்நாட்டின் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக  இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு எச்-1பி விசா  வழங்கப்படுகின்றது. அந்த விசா 3 ஆண்டுகள்  முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வழங்கப்படுகிறது. எல்-1 விசாவின் கீழ் 7 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம். ஜே-1 விசா, பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரியது.

 

இந்நிலையில், உலக நாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பல மாகாணங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்ததுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால்  லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். அதனை கருதி, கடந்த ஜூன் மாதம்  22ஆம்  தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அமெரிக்க விசாக்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டார். அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகளில் ஏற்படும்  பாதிப்பை  தடுக்கும் வகையிலும் , வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை கிடைப்பதை குறைக்கும் விதத்திலும் எச்-1பி உள்ளிட்ட அமெரிக்க விசாக்கள் மீது இந்த ஆண்டு இறுதிவரை தடை விதித்து அந்த உத்தரவு வெளியிடப்பட்டது.

 

 

எச்-1பி விசாக்கள் மூலம் அமெரிக்காவில், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மட்டுமே அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெற்று வந்தவர்கள். இந்நிலையில் டிரம்பின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக எச்-1பி, எல்-1 மற்றும் ஜே-1 விசாக்கள் மீதான பயண தடையில் இருந்து சுகாதார துறையினருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை விடுத்து கடிதங்கள் எழுதியுள்ளனர்.

 

 

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப துறையினரும், சுகாதாரத்துறை பணியாளர்களும் பலன்பெற கூடிய வகையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “அமெரிக்காவில் தொடர்ந்து வேலைவாய்ப்பினை மீண்டும் பெற முற்படும் ஊழியர்களுக்கு எச்-1பி மற்றும் எல்-1 விசாக்கள் மீண்டும் வழங்கலாம். ஆனால் அவர்கள் ஊரடங்குக்கு முன்னர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினார்களோ அதே நிறுவனத்தில் தான் பணியாற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

 

 

சுகாதார துறையில் பணி புரிந்தவர்கள் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கணிசமான பொது சுகாதார நன்மை உள்ள பகுதிகளில்தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நடத்த விரும்புவோருக்கும் விசா தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்-1பி, எல்-1 மற்றும் சில வகை ஜே 1 விசாக்களில், விசாதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்கா வர சலுகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளால் இந்தியர்கள் பெருமளவில் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிகஅளவில்  உள்ள இந்தியர்களின் ஆதரவை பெறும் வகையில் இந்த விசா சலுகைகளை டிரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளதாக கருதபடுகிறது.

Categories

Tech |