ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் தமிழக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இச்சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து செம்மர கட்டைகளை தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று தமிழக எல்லைக்குள் விரைவாக நுழைந்து சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காவல்துறையினர்கள் லாரியை பிடிக்க மோட்டார் சைக்கிளில் துரத்தியுள்ளார்கள்.
இதனை கவனித்த லாரி டிரைவர் வண்டியின் வேகத்தை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் கே.ஜி.கண்டிகை என்ற கிராமத்தில் லாரியை போட்டுவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்ததில் சுமார் ஒரு கோடி மதிப்புடைய 2 டன் செம்மரக்கட்டைகள் ஆந்திராவிலிருந்து கடத்தியது அம்பலமானது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.