பாகிஸ்தானில் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக வெடித்துள்ள போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான். இவர் தனது ஆட்சி காலத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதனை இம்ரான்கான் அரசின் கஜானாவில் வைத்தார். இதனையடுத்து அந்த பொருட்களை சலுகை விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்தார்.இந்நிலையில் வருமான வரி தாக்கலில் மறைந்ததாக இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தல் கமிஷன் தற்போது எம்.பி.யாக உள்ள இம்ரான்கானின் பதவியை பறித்தும், 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதித்தும் தீர்ப்பை வழங்கியது. மேலும் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது.
இதனை கேட்ட அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் டயர்களை போட்டு எரித்தனர்.இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இம்ரான் கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கை தலைமை நீதிபதி வருகின்ற 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.