பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ன பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கிய நிலையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பேரூராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், செயல் அலுவலர் மல்லிகா, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அனைத்து வார்டுகளிலும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதற்கு இதைதான் ஒரு மாதமாக கூறி வருகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் பொதுமக்களை அமைதிபடுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காலதாமதமின்றி குடிநீர் குழாய் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன் பிறகு எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.