திருப்பதியில் நவம்பர் டிசம்பர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் எளிதில் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவம்பர்,டிசம்பர் மாதத்திற்கான இணையதள டிக்கெட் முன்பதிவு நேற்று முன் தினம் காலை ஒன்பது மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட் கட்டணம் 300 ரூபாய் ஆகும் சேவை தொடங்கிய 19 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதில் மொத்தம் 7.8 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தேவஸ்தானத்திற்கு மொத்தம் 21 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரி சுப்பா ரெட்டி கூறுகையில் இதற்கு முன்புவரை ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போது இணையதள சேவையில் சில சிக்கல்கள் இருந்து வந்தன. ஆனால் தற்போது ஜியோ நிறுவனத்தின் உதவியுடன் டிக்கெட் சேவையில் எந்த தங்கு தடையும் இன்றி எளிதில் நிறைவு பெற்றது. மேலும் ஜியோ நிறுவனம் கிளவுட் டெக்னாலஜி மூலம் இணையதள சேவையை எளிதாக நடைபெற பேருதவி செய்தது. மேலும் இந்த சேவையின் மூலம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு மட்டுமன்றி தங்கும் அறைகளையும் புக் செய்து கொள்ளலாம் என அவர் கூறினார். மேலும் பக்தர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பெறும் வகையிலான மொபைல் பிளாட்பார்ம் வரும் வைகுண்ட ஏகாதேசி அன்று தொடங்கப்படும் என அவர் கூறினார்.