தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுத்துறை வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்துவதால் அரசுத் துறை வாகனங்கள் வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் நிற்கின்றன. எனவே ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் அரசுத்துறை வாகனங்கள் நிறுத்த கூடாரம் அமைத்து தர வேண்டும்.
அதேபோல் அரசுத்துறை வாகனங்களில் பழுது ஏற்பட்டாலும் அதை சரிசெய்ய திருச்சியில் இருந்து வரும் நடமாடும் பணிமனை வாகனத்தை தண்ணீர்பந்தல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தாமல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறை வாகனத்தை இயக்கும் டிரைவர்கள் அனைவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டில் எளம்பலூரில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், வீட்டுமனைக்காக அரசு நிர்ணயம் செய்யும் நில மதிப்பு தொகை நாங்களே செலுத்துகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.