பொது இடங்களில் பிராங்க் செய்யக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களாகிய பள்ளி வளாகங்கள், நடைபயிற்சி மைதானங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் பொதுமக்களை பிராங்க் செய்து வீடியோ எடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனால் கோவை மாநகர காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிலர் குறும்புத்தனமான வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த பிராங்க் வீடியோ எடுப்பதால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அதோடு நடந்து செல்லும் பெண்களின் கையைப் பிடித்து இழுத்தல், அவர்களின் உடம்பை தொடுதல் போன்று முகம் சசுழிக்க வைக்கும் விதமாக பிராங்க் செய்கின்றனர். இந்த பிராங்க் வீடியோக்களை சிலர் யூட்யூப் சேனலில் பதிவிடுகின்றனர். அதை சம்பந்தப்பட்டவர்கள் கேட்கும் போது பிராங்க் வீடியோ என்று கூறி சமாதானம் செய்கின்றனர். இந்நிலையில் பிராங்க் வீடியோ எடுப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் யூடியூப் சேனலில் போடுவதால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படுகிறது. எனவே பொது இடங்களில் யாரும் பிராங் செய்யக் கூடாது. அதை மீறி குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.