முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஆஜராகி பதில் அளித்திருந்தார். அதில் அவரிடம் 78 கேள்விகள் கேட்க பட்டதாகவும் அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆஜராகும்படி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து அவர் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை ஜெயலலிதா தான் தேர்வு செய்தார்.
இடைத் தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதாதான் கையெழுத்திட்டுருந்தார். அவர் மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் உணவு சாப்பிடுவதாகவும் சசிகலா என்னிடம் கூறினார். மற்றபடி அவர் அரசு சார்ந்த எந்த விஷயங்களையும் என்னிடம் பகிரவில்லை. இதனை நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் எங்கும் கூறவில்லை.!” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.