நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம்.
ஆக இந்த நீட் சட்டம் இந்த மண்ணில் தொடர்ச்சியாக இங்கு இருக்கும் என்று சொன்னால், இந்த மண்ணில் பூர்வ குடி மக்களாக இருக்கின்ற, இந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கின்ற, தமிழ் நாட்டில் வாழ்கின்ற ஏழுகோடி பொதுமக்களின் பிள்ளை செல்வங்களுக்கான மருத்துவம் படிக்கின்ற அந்த உரிமை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும்.
ஏதோ இங்கு இருக்கின்ற நம்மில் சில பேர் இந்த ஏழு கோடி மக்களில் வசதிபடைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், உயர்ஜாதி வகுப்பினர், பணம் படைத்தவர்கள் சென்று அவர்கள் இன்று காப்பி அடிப்பதற்கு ஏற்பாடு செய்து தருகின்ற அல்லது ஏற்கனவே பதில்களை வெளியிடுகின்ற, வட மாநில பயிற்சி மையங்கள் மூலமாக அவர்கள் தேர்ச்சி பெற்று யாராவது வசதி படைத்தவர்கள் வரலாம் அல்லது ஐந்து லட்சம் ரூபாய் 3 லட்சம் ரூபாய் தனியார் பயிற்சி மையங்களுக்கு பணம் கட்டி அதில் தேர்ச்சி பெறுகின்றவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாம்.
ஆனால் நம்மைப் போன்ற ஏழை, எளிய விவசாய மக்கள், தொழிலாளர் மக்கள், உழைக்கும் மக்களுடைய பிள்ளைச் செல்வங்கள் மருத்துவராக வர முடியாது, அப்படி மருத்துவராக வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வை நம் மீது திணித்து இருக்கிறார்கள்.அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, இது மக்கள் விரோத அரசு, மாணவர் விரோத அரசு, இந்த மத்திய அரசு இது கொண்டு வந்திருக்கின்ற இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றி இன்றைக்கு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.