காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவுசெய்ய இருக்கிறார். இதற்குரிய தொடக்கவிழா சென்ற 7-ஆம் தேதி குமரியில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை துவங்கிவைத்தார்.
இந்நிலையில் கேரளாவில் தனது பாதயாத்திரை பயணத்தை முடித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரளா மக்களுக்கு தன் நன்றியை தெரிவித்து இருக்கிறார். அதாவது “அன்பு கிடைக்கும் இடம் வீடு என்பார்கள். அதுபோன்றுதான் எனக்கு கேரளா. இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நன்றி” என அவர் டுவிட்டரில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை 3 மணியில் இருந்து கேரளா, நிலம்பூர் வழியாக மீண்டும் தமிழகம் வரும் அவர், தனது பயணத்தை நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.