Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?….. 5 சவரனுக்கு மேல் பெற்ற நகைக்கடனும் தள்ளுபடி…. புதிய பரபரப்பு….!!!!

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கான நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே கீழ்ப்பசலை கிராமத்தில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்காக  54 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 24 பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் 5 பவுனுக்கு மேல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும்  நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியூரில் வசிக்கும் நபர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காத கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மானாமதுரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் நகைக்கடன் தள்ளுபடியில் இருக்கும் ஊழல்கள் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |