தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்கான ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையுடன் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது. எனவே ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்றும் நாளையும் தாக்கல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மயிலாடுதுறை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.
அந்த லிஸ்டில் தற்போது மயிலாடுதுறை நகராட்சியில் சுயேச்சை வேட்பாளரான பிரகாஷ் என்பவர் 9-வது வார்டில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்ய சென்றிருந்தார். அப்போது தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை பேப்பரில் எழுதி அதனை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு நூதன முறையில் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவ்வாறு சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ் வார்டு பிரச்சனைகளை பேப்பரில் எழுதி அதனை மாலையாக அணிவித்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருப்பதை கண்ட பொதுமக்கள் பலரும் அவரை வித்தியாசமாக பார்த்துள்ளனர்.