ஆந்திர மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருமலையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அனைவரும் திருமலையில் உள்ள ஓய்வு அறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி-திருமலை செல்லும் இரட்டை வழிப் பாதை மற்றும் அலிபிரி நடைபாதை ஆகியவை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் திருமலையில் சிக்கிக் கொண்டனர்.
மேலும் மழை வெள்ளத்தால் திருப்பதி கோவிலுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை சற்று குறைந்துள்ளதால் நேற்று காலை முதல் திருமலைக்கு செல்லும் இரட்டை வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முழுமையாக மழை நின்ற பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் வருவார்கள் என்று கூறப்படுகிறது.