வாலிபர் தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசித்து வந்த முகமது வாகித் என்பவர் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மளிகை கடையில் பணம் திருடு போன நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது வாகித்திடம் உரிமையாளர் சீனி பக்கீர் மற்றும் அவரது உறவினர்கள் விசாரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த முகமது கடந்த 10ஆம் தேதி தான் தங்கியுள்ள அறைக்கு சென்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முகமது வாகித்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடந்த 15ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே முகமது வாகித் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரிடையே தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.