வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் மூன்று மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை தினங்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். சீசன் காரணமாக கொடைக்கானல் விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். அவர்கள் அனைத்து சுற்றுலா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியின் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் பகல் 12 மணியளவில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதனை கண்ட சிலர் கொடைக்கானலுக்கு வாராமல் திரும்பி சென்றுவிட்டனர். சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து செண்பகனூர் பகுதிக்கு கொரோனா பரிசோதனை மையத்தை மாற்ற வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.