சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் முதல்வர் மாணவிகளுக்கு ஒரு ஆட்டுக்குட்டி கதையை கூறினார். அதாவது மந்தைகளில் இருந்து ஆட்டை ஓட்டி செல்லும் நபர் ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை மட்டும் தோளில் சுமந்து கொண்டு செல்வார். அந்த ஆட்டுக்குட்டிக்கு காலில் அடிபட்டிருக்கும். இல்லை எனில் நடக்க முடியாத ஆட்டுக்குட்டியாக இருக்கும். அதுதான் சமூக நீதி என்று கலைஞர் சொல்லி இருக்கிறார். அந்த ஆடு மேய்க்கும் நபர் தோளில் ஆட்டை சுமந்து வந்தது அந்த ஆட்டுக்குட்டிக்கு கொடுக்கும் சலுகை கிடையாது. அது ஆடு மேய்ப்பவரின் கடமை என்றார். இந்த ஆட்டுக்குட்டி கதை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் தான் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது அரசின் கடமை. மாணவிகள் பள்ளி படிப்போடு நின்று விடாமல் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவே மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அறிவுத்திறன் உயர்ந்து படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பாலின சமத்துவம் ஏற்படுவதோடு, குழந்தை திருமணங்களும் குறையும். திறமைசாலிகள் அதிகரித்து பெண்களும் அதிகாரம் பெறுவார்கள். பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதோடு ஒவ்வொரு கொடுமைகளையும் சகித்து அதை எதிர்த்து போராடுவார்கள். எங்கள் ஆட்சியின் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் என்பதே. கடந்த 1 வருடத்தில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு விதமான சாதனைகளை புரிந்துள்ளது.
அதன்படி வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம், இளந்தளிர் இலக்கிய திட்டம், முத்தமிழர் மொழிபெயர்ப்பு திட்டம், வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, வகுப்பறை உற்று நோக்கு செயலி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, ஒவ்வொரு பள்ளிகளும் நூலக வசதி, மாணவர் மனசு ஆலோசனை பெட்டி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகள், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சி புத்தகங்கள், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிய செயலி, பள்ளி மேலாண்மை குழுக்கள், நான் முதல்வர், இல்லம் தேடி கல்வி போன்ற பல எண்ணற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.