பா.ஜ.க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்கவிழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியானது மாத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பாக பாடி மேம்பாலம் அருகில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது “மதுரையில் கல்லூரி முன் ஒரு மாணவியின் தந்தை தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது நம் சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப்போய் இருக்கிறது என்பதை பார்க்கமுடியும். சில சமயங்களில் காவல்துறை கடுமையாக இருக்கவேண்டும். காவல்துறையின் கையை கட்டவிழ்த்துவிட்டு சில விஷயங்களை தைரியமாக செய்ய சொல்லவேண்டும்.
தமிழ்நாட்டில் அரசியல் மாறவேண்டும். ஒரு வருடத்தில் 10 % ஊழல் செய்தால் 5 ஆண்டுகளில் நடக்கும் மொத்த ஊழலால் ஒரு தலைமுறை மேலே உயர்வது தடுக்கப்படும். அது 20 சதவீதம் ஆக இருந்தால் இருதலைமுறைகள் மேலே வருவது தடுக்கப்படுகிறது. இதனை மாற்றவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும் தினசரி பா.ஜ.க உழைத்துவருகிறது. ஆகவே ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க வழங்கும்” என்று பேசினார்.