மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். திருமண விழா முடிந்தபின் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புதன் ஸ்தலத்தில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கு முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டார். இதன் பின் ஸ்வேதாரண்யேஸ்வரர் சுவாமி பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், அகோர மூர்த்தி சுவாமி, புதன் சன்னதி, காளி சன்னதிகளில் வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின் தர்மபுரம் ஆதீனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். கார் மூலமாக தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அவருக்கு சிறப்பாக வரவேற்புகள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக தர்மபுரம் ஆதீனத்துடன் எடப்பாடிபழனிசாமி தனியாக பேசியுள்ளார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்ததற்கு தருமபுரம் ஆதினம் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழகத்தில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது எனவும் எம்மதமும் சம்மதம் என்று தமிழக அரசு பார்க்க வேண்டும்.
மேலும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழி முறைகளில் நாம் தலையிடக் கூடாது. அதிலும் குறிப்பாக ஆதின விவகாரங்களில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கதாகும். சுமார் 500 வருட காலம் இந்த பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மட்டும் அதை நிறுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.