ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தனது விடுதலை குறித்து பேரறிவாளன் தெரிவித்துள்ளதாவது: “உலகத் தமிழர்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்த்ததற்கு என் அம்மாதான் காரணம். தொடக்க காலத்தில் பல அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்தார். பல்வேறு தடைகளை கடந்து எனது விடுதலைக்காக போராடி எனது தாயார் தற்போது வென்றுள்ளார். பெற்றோருக்கு வயதாவதை பார்க்கும்போது அவர்களது வாழ்க்கையை வீணடிக்கிறோம் என்று வருந்துவேன்” என்று எனது தாயின் தியாகத்தையும், போராட்டத்தையும் குறித்து பேரறிவாளன் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.