இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் அதிபர், பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதையடுத்து அதிபரால் 4 மந்திரிகளை மட்டுமே நியமனம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் வகையில் அனைத்துக் கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், இடைக்கால அரசில் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளன.
அதோடு மட்டுமில்லாமல் இலங்கை அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இடைக்கால அரசு அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தனி கூட்டணி கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த
வகையில் இலங்கையில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனா கூட்டணியிலிருந்து விலகி சுயேச்சையாக செயல்பட்டு வரும் 42 எம்.பி.க்களுடன் அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.