லதா மங்கேஷ்கர் தமிழ் பாடல்களை இளையராஜா இசையில்தான் அதிக அளவில் பாடியுள்ளார்.
இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் நேற்று காலை காலமானார். அவருக்கு 92 வயதாகிறது. இவர் “நைட்டிங்கேல்”, “இசைக்குயில்” என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவர் 36 மொழிகளில் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார். 1952 ஆம் வருடம் இந்தியில் “ஆன்” என்ற திரைப்படம் வெளிவந்தது. இதை தமிழில் டப்பிங் செய்து “ஆன் முரட்டு அடியாள்” என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் நான்கு பாடல்களை பாடியிருக்கிறார். 1955-ஆம் வருடம் இந்திப்படம் “உரன் கடோலோ” தமிழில் “வன ரதம்” என்று வெளியாகியது. இத்திரைப்படத்தில் “எந்தன் கண்ணாளன்” என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.
இதற்குப் பின் தமிழ் படத்தில் முதல் முறையாக “ஆனந்த்” திரைப்படத்தில் இளையராஜா இசையில் லதா மங்கேஷ்கர் ஆராரோ ஆராரோ என்ற பாடலை பாடியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபு-ராதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் ஹிட்டானது. இத்திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த “சத்யா” திரைப்படம் 1988-ஆம் வருடம் இளையராஜா இசையில் வெளிவந்தது. அதில் லதா மங்கேஷ்கர் எஸ்.பி.பியுடன் “வளையோசை.. கலகலவென” என்ற பாடலை பாடியிருந்தார். அந்த வருடத்திலேயே கார்த்திக் நடித்த “என் ஜீவன் பாடுது” என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் “எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” என்ற பாடலை பாடகர் மனோவுடன் இவர் பாடியிருந்தார். இந்தியில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். தமிழில் இளையராஜா இசையில் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.