சிவகங்கை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி “சீல்” வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேனம்மாள்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரையும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வெளியாட்கள் உள்ளே செல்லவோ, அந்த கிராமத்தினர் வெளியே செல்லவோ தடை விதிக்கப்பட்டது. மேலும் கம்புகளால் கிராமத்திற்கு செல்லும் வழியில் குறுக்கே அடைக்கப்பட்டு “சீல்” வைக்கப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.