விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி பகுதியில் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிறிதுகாலம் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 18ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலைக்கு ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போதைய கால நிலவரப்படி அதிக வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும்,அங்குள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும் ,10 வயதிற்கு கீழ் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் இருமல் ,காய்ச்சல் என உடல்நிலை சரியில்லாதவர்களும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை. மேலும் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்து பின் அவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.