உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் என்பது மிக மிக அவசியமானது. ஏனெனில் வைரஸ் தொற்றின் தாக்கம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருப்பதற்காக முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் முகக்கவசம் அணிந்து கொண்டு ஒருவர் வெளியே செல்லும்போது காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை செல்போனுக்கு குறுந்தகவல் மூலமாக தெரியப்படுத்தும் நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த முகக்கவசம் சாதாரண வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் போன்ற அனைத்து வகையான வைரஸ் தொற்றுகளையும் கண்டுபிடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன முகக்கவசம் சீனாவில் உள்ள ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போது, தும்பும்போது அவர்களின் நீர் குமிழ்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி விடுகிறது. இதனால்தான் கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒருவகை செயற்கை மூலக்கூறான அப்டேமர்களைக் கொண்ட சிறிய சென்சார் நவீன முகக்கவசத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் காற்றில் உள்ள வைரஸ் தொற்றுகளை அடையாளம் கண்டு செல்போனுக்கு மெசேஜ் அனுப்புகிறது.