அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை “கிங் ரிச்சர்ட்” என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்பாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் காமெடியாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை குறித்து காமெடியாக பேசினார். இதன் காரணமாக கோபமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இதையடுத்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று அவசரப்பட்டு விட்டதாகவும் தன் செயலால் சங்கடமடைந்து இருப்பதாகவும் மன்னிப்பு கோரினார்.
இது குறித்து ஆஸ்கர் அகாடமி அளித்த விளக்கத்தில், கிறிஸ் ராக்கை அறைந்த பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதன்பின் நடத்தை விதிமுறைகளை மீறியதால் வில்ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது பற்றி ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தது. இந்த நிலையில் Academy of Motion Picture Arts and Science அமைப்பின் பதவியை ஸ்மித் ராஜினாமா செய்துஇருக்கிறார். கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.