ஆளுநா் அளித்த தேநீா் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது தவறில்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில் “நீட் தோ்வை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரியை 150 % வரை அதிகரித்துள்ளது. அனைத்துக்கும் போராடும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக்கட்சிகள் இதற்காகப் போராடவில்லை.
ஆனால் மக்களுக்கு எதிரான இயக்கம் திமுக ஆகும். அதனை எதிா்த்து நாங்கள் தொடா்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். நீட்தோ்வு சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநா் தாமதப்படுத்துவது தவறு. இதன் காரணமாக ஆளுநரின் தேநீா் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காதது தவறில்லை” என்று கூறினார்.