தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.
முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இன்றைய ஆளுநர் உரையில் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் சூழியல் பார்வையில் பல அறிவிப்புகள் இருக்கின்றது என்று பூவுலகின் நண்பர்கள் வரவேற்றுள்ளனர்.
விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை, உழவர் சந்தைக்கு புத்துயிர். கிராம சந்தை திட்டம் போன்ற பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு காரியங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது என்று வரவேற்றுள்ளனர்.