இந்திய ஆளுங்கட்சி தலைவர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதியை ரஷ்யா உளவுப்படை கைது செய்தது.
ரஷ்ய நாட்டின் தேசிய பாதுகாப்பு முகமை கடந்த 22-ஆம் தேதி மாஸ்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், இதற்காக துருக்கியிலிருந்து ரஷ்ய வந்ததாகவும், பின்னர் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அந்த பயங்கரவாதி தெரிவித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மதக்கடவுளின் இறை தூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் (நுபுர் சர்மா) மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஐஎஸ் பயங்கரவாதி தெரிவித்துள்ளான்.
பயங்கரவாதிக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தஷ்கெண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷெய்குவை இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்துள்ளர். இந்த சந்திப்பின்போது, இந்திய ஆளுங்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்ததற்காக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரிக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.