ஆலமரங்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரே ஆலங்குளம் எனக்கூறப்படுகிறது. ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வனவாசம் சென்ற போது வந்து சென்ற பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆலங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்கள் இராமாயணத்தோடு தொடர்புடையதாகவே உள்ளன. இங்குள்ள ஒரு மலையில் ராமனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. விவசாய மற்றும் பீடி சுற்றுதல் இப்பகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், காந்தி காமராஜ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. தற்போது திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏவாக உள்ளார். ஆலங்குளம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,60,141 பேர். பிரதான தொழிலாக பீடி சுற்றும் தொழில் நலிவடைந்து உள்ளதால் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஆண்டிபட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். முக்கூடல் பகுதியில் உள்ள ஆற்று நீரை கொண்டுவந்து குளங்களில் நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக உள்ளது. ஆலங்குளம் தாலுகா மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
கொல்லம்-தூத்துக்குடி நான்கு வழி சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. நான்கு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்று இடத்தில் கடை வழங்கப்பட வேண்டுமென வணிகர்கள் வலியுறுத்துகின்றனர். கிராமங்களில் மையப்படுத்தி பொதுத்துறை வங்கி கிளைகளை உருவாக்க வேண்டும் என்பதும் மக்களின் விருப்பமாகும்.