இப்போதெல்லாம் சுற்றுலாக்கு செல்வோர் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகளை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் உதகையில் நடந்துள்ளது. உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரை சேர்ந்த இளம் பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, தனது நண்பர்கள் எட்டு பேருடன் கல்லட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து ஆற்றை கடக்க முயன்ற போது திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.