தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காக இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கரை தொடர்ந்து இப்போது அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அடுத்து ஏழாவது இலக்கு யாராக இருக்கக்கூடும் என்று அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.