தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தாறுமாறாக பேருந்து கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நாளை முதல் மூன்று தினங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் பேருந்து கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தனியார் பேருந்து நிறுவனங்கள் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்து துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும் பெரும்பாலானோர் புகார் அளிக்க முன் வருவதில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துக் கட்டணத்தை வரைமுறை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.