ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குமாகாணமான நங்கர் ஹாரிலுள்ள கானிகைல் மாவட்டத்தில் இருக்கும் பெரிய சந்தை நேற்றுகாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அப்போது மக்கள் தேவையான பொருட்களை வாங்கிகொண்டு இருந்தனர். இதனிடையில் மக்களின் பாதுகாப்புக்காக தலீபான் அரசின் பாதுகாப்பு படையினர் சந்தையில் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தைக்குள் நுழைந்த அரசு அதிகாரி ஒருவரின் காரில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது.
இந்த குண்டு வெடிப்பில் சந்தையில் இருந்த பெரும்பாலான கடைகள் உருக்குலைந்து போனது. குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அத்துடன் பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் உட்பட 28 பேர் பலத்த காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு உடனே எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.