Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தென்பட்ட பின்லேடனின் பாதுகாப்பு தலைவர்… இணையத்தில் வெளியான வீடியோ..!!

ஒசாமா பின்லேடனின் முதன்மை பாதுகாப்பு தலைவரான அமீனுல் ஹக் ஆப்கானிஸ்தானுக்கு சென்று திரும்பிய காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புடன் கடந்த 2020-ம் ஆண்டு “ஆப்கானிஸ்தானில் இனி தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம்” என்ற ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டனர். அதன்படி நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் தீவிரவாதிகளையோ, தீவிரவாதத்தில் தொடர்புடைய நபர்களையோ நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க நிர்வாகத்திற்கு தலிபான் பயங்கரவாதிகள் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நங்கர்ஹர் பிராந்தியத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னணி ஆயுத விநியோகஸ்தரான அமீனுல் ஹக் தென்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஆப்கானிஸ்தானில் தென்பட்டதற்கான காணொளி ஒன்றும் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அமீனுல் ஹக் தலிபான்களின் சோதனைச்சாவடிகள் வழியாக காரில் பயணித்த காட்சி பதிவாகியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மக்கள் பலரும் திரளாக சென்று அமீனுல் ஹக்குடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொள்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதற்கிடையே சர்வதேச அரசியல் நோக்கர்கள் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானின் முகம் படிப்படியாக மாறி வருவதாகவே தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |