ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்குவதற்கு அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பல மாகாணங்களில் பொது மக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக தலிபான் பயங்கரவாதிகளிடம் போராடி வருகின்றனர். ஆயுதமேந்திய அரசுசார் போராளிகள் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கின்ற தாக்கர் மகாணத்தில் லால குஷார் என்ற இடத்தில் அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போராளிகள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அது மட்டுமன்றி பல போராளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மோதலில் தலிபான் பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படை கூறியுள்ளது. ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.