பெண்ணிடமிருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மாங்குடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சீதாலட்சுமி தனது வாட்ஸ் அப் எண்ணில் வந்த லிங்கை தொட்டு அதில் வங்கி கணக்கு விபரத்தை தெரிவித்துள்ளார். அதன் மூலம் 100 ரூபாய் முதலீடு செய்ததால் 160 ரூபாய் சீதாலட்சுமிக்கு கிடைத்தது.
இதனை அடுத்து 500 ரூபாய் செலுத்தியதால் 2000 ரூபாய் கிடைத்தது. பின்னர் பல்வேறு தவணைகளாக சீதாலட்சுமி அந்த நிறுவனத்தை நம்பி 8 லட்சத்து 47 ஆயிரத்து 18 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு பணத்தை வழங்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீதாலட்சுமி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்வழக்கு பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களின் வாட்ஸ் அப் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.