ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த மணலி புதுநகர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் மணலி புதுநகரில் இருந்து கந்தன்சாவடி ரயிலில் சென்று வரும்போது பவானி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகவும் பல இடங்களில் கடன் பெற்று ரம்மி விளையாடி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடி உள்ளார். அது மட்டுமில்லாமல் தன் தாய், சகோதரிகள் இருவரிடமும் தலா ஒன்றரை லட்சம் என மூன்று லட்சம் கடன் பெற்று ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் தற்கொலை என்பதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளின் தாய் நகைகளை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த குழந்தைகள் தாய் இன்றி தவித்து வருகின்றனர்.