ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்தும் சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் விவரங்களை தமிழக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று டெல்லி காவல்துறை நிஜாமுதீன் பகுதியை சுற்றிவளைத்தனர். மசூதியில் இருந்த 300க்கும் மேற்பட்டோரை வெவ்வேறு மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை அந்த பகுதி முழுவதும் நோய் சுத்திகரிப்பான் மருந்து தெளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி ஆந்திராவில் புதிதாக 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிலர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 17 பேரில் இருவர் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேபோல குண்டூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், கிருஷ்ணா மாவட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் விவரங்கள் குறித்து ஆந்திர சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது.