வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்ததில், தந்தையும்,மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்ற இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது திடீரென தீ பிடித்துள்ளது. அதன்படி மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது27).
இவர் நேற்று முன்தினம் இரவு அன்று, சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மணப்பாறைக்கு வந்து, அங்கு உள்ள ஆஞ்சநேயர் பகுதியில் இருக்கும் அவரது நண்பர் பாலு என்பவரின் கடையில் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை கடைக்கு சென்ற பாலு, உள்ளே இருந்த எலக்ட்ரிக் பைக்கை எடுத்து, வெளியே விட்டபோது, அந்த பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பி உள்ளது.
அதன் பின்னர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தபோது, சிறிது நேரத்தில் புகையானது அதிக அளவில் வெளியேறி பேட்டரி பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு எலக்ட்ரிக் பைக் தீப்பிடிக்க,அதிலுள்ள பேட்டரியானது மிக முக்கிய காரணமாக உள்ளது. அந்த பேட்டரி, லித்தியம் அயன் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதனால் பேட்டரியில் ஏற்படும் சேதாரம் அல்லது மின் கசிவின் காரணமாக தீப்பிடிக்கின்றன. மேலும் இவ்வாறு லித்தியம் அயன் பேட்டரி ஒரு முறை தீ பிடித்து விட்டால், அதனை அணைப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீரின் மூலம் தீயை அணைத்தால், பேட்டரியில் உள்ள ஹைட்ரஜன் கேஸ் மற்றும் லித்தியம் ஹைட்ராக்ஸைட் வாயு வெளியேறும். அவ்வாறு வெளியேறும் வாயு பெரும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள கேஸ் எனக் சொல்லப்படுகிறது.