வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம்.
இந்த நடவடிக்கையானது ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனை நீங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சென்று அவரின் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் 6 பி படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் www.nvps.in என்ற இணையதளத்தை பயன்படுத்தியோ அல்லது voters helpline app என்ற ஆப் மூலமாகவோ ஆன்லைன் முறையில் இணைத்துக் கொள்ளலாம். இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 சதவிகிதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து இருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.