தம்பதியினர் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் கிராமத்தில் பிரபாகரன்-சுஜாதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ஆம் தேதி சுஜாதாவிற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று சுஜாதாவின் மாமியார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது. இது குறித்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு தம்பதியினரை குழந்தையுடன் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக சுஜாதாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த தம்பதியினரை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிச்சிவாக்கம் பகுதியை சேர்ந்த ராமன் மற்றும் சத்யபிரியா என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவரும் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.