பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கி இருக்கிறார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணிபெண்ணும், குழந்தையும் இருந்துள்ளனர். நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிவந்ததால் 1500ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு போகும்மாறு பாலமுரளி கூறியுள்ளார்.
அதற்கு ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் என்பதாலும், ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதாலும் அவசரமாக செல்ல வேண்டும். மன்னித்து விடுங்கள் என தெரிவித்து இருக்கிறார். எனினும் உதவி ஆய்வாளர் பாலமுரளி தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்து அபராதம் செலுத்தாமல் அனுப்ப முடியாது என மிகவும் கோபத்தோடு பேசியுள்ளார். இதை சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன்பின் வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்ட அந்த நபர்கள் உதவி ஆய்வாளர் மது போதையில் இருந்ததாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அத்துடன் அந்த வீடியோவை பலர் ஷேர்செய்து கொண்டும், விமர்சித்து கமெண்ட் செய்துகொண்டும் இருக்கின்றனர்.