தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் வானரமுட்டி கணேஷ் நகரை சேர்ந்த பெருமாள்சாமி கட்டட வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கருவுற்று இருந்த கிட்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 குட்டிகளை பெற்றது. பெருமாள் சாமி அந்த ஆறு குட்டிகளையும் நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் பெருமாள் சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் வளர்த்த ஆடு ஓன்று 4 குட்டிகளை பெற்றது. அதில் ஒரு குட்டியை தனது தந்தை பெருமாள் சாமியிடம் அவர் கொடுத்துள்ளார். பெருமாள்சாமி அந்த குட்டியை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். ஆட்டுக்குட்டியும், நாயும் வீட்டில் சேர்ந்து வளர்ந்த நிலையில், ஆட்டுக்குட்டிக்கு பசி எடுத்ததும் நாய் தாய்ப்பால் கொடுத்தது. இதைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர்.